சில மாதங்களுக்கு முன், கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி எரிக் ஸ்மித் அவரது பதவியில் இருந்து விலகி, கூகுளின் நிறுவனர்களின் ஒருவரான, லேரி பேஜ் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளப்போவதாக எழுதி இருந்தது, இந்த வாரம் நிகழ்ந்து விட்டது. லேரி பேஜின் உடனடி நடவடிக்கைகளைப் பார்க்கும் போது, 'தனது முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தன் முருங்கை மரத்தில் ஏறி, வேதாளத்தைத் தூக்கி முதுகில் சுமந்த’ கதைகள்தான் நினைவுக்கு வருகிறது.
விக்ரமாதித்தன் = கூகுள்
முருங்கை மரம் = இணையம்
வேதாளம் = சமூக ஊடகத் தொழில்நுட்பம்.
இந்த நவீன இணைய வேதாள கதையை விரிவாகப் பார்க்கலாம்!
சமூக ஊடக முயற்சிகளைப் பல்லாண்டுகளாக கூகுள் தொடர்ந்தபடியேதான் இருக்கிறது. அவர்களின் முதல் முயற்சி ஆர்குட் சமூக நெட்வொர்க்கிங் தளம். அமெரிக்காவில் இருக்கும் கூகுளின் முயற்சி என்றாலும், இந்தியா, பிரேசில் இரண்டு நாடுகளைத்தவிர, வேறு எங்கும் ஆர்குட் என்றால் என்ன என்பதே தெரியாமல் போனது முதல் அடி! அவர்களது ஜி-மெயில் ஒரு மகத்தான வெற்றி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.இணையத்தில் இயங்கும் மின்னஞ்சல் தொழில்நுட்பமான ஜி-மெயிலை அடித்தளமாகப் பயன்படுத்தி, இரண்டு முயற்சிகள் மேற்கொண்டார்கள். அவை...
கூகுள் வேவ் பயனீட்டாளர்கள் தமக்குள் தகவல்களை எளிதாகப் பிரசுரம் செய்தும், பகிர்ந்துகொண்டும் இருக்க வசதியாக உருவாக்கப் பட்ட இந்தத் தொழில்நுட்பத்தின் பயனீட்டாளர் அனுபவம் (user experience) மிக மோசம். இணைய தொழில்துறையில் பணி புரிபவர்களே இதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாமல்,முழி பிதுங்க,சாமானியப் பயனீட்டாளர்களைப்பற்றி கேட்கவே வேண்டாம். இரண்டு ஆண்டுகள் இதை நடத்திய பின்னர், 'போதுமடா சாமி!’ என்று பெருமூச்சுடன் வேவ் தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து மெருகேற்றுவதை நிறுத்தப் போவதாக அறிவித்தது கூகுள்.மேல் விவரங்களுக்கு இந்த உரலி: http://www.google.com/support/wave/bin/answer.py?answer=1083134
கூகுள் பஸ்:
மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியிடப்பட்ட பஸ் தொழில்நுட்பம், வாயு வேகத்தில் பிரபலமான டிவிட்டரின் பாதிப்பில் உருவானதாகக் கருதப்பட்டது. அந்தப் பதற்றத்தில், பல தவறுகள் செய்தது கூகுள். ஜி-மெயில் பயனீட்டாளர் கள் அனைவரையும், அவர்களது சரியான அனுமதி இன்றி பஸ்ஸில் இணைத்துவிட்டது.ஜி-மெயில் தகவல்கள் பஸ் மூலமாகக் கசிய நேர்ந்தது எனப் பல பிரச்னைகள், கூகுளை கோர்ட்டுக்குள் இழுத்துவந்தது. சென்ற வாரத் தில் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக் கொண்டது கூகுள். சுருக்கமாகச் சொன்னால், பரபரப்பாகத் தொடங்கப்பட்ட பஸ், இப்போது புஸ்ஸென்று காற்று இறங்கிய பலூனாக பரிதாபக் காட்சி அளிக்கிறது.அதிகவிவரங்களுக்கு: http://news.yahoo.com/s/afp/20110330/pl_afp/usitcompanyprivacyinternetgoogleftc
இந்தத் தோல்விகள் தங்களைப் பெரிதாகப் பாதித்ததாகக் காட்டிக்கொள்ளாமல், அடுத்த முயற்சியில் கூகுள் இறங்கிவிட்டது. சென்ற வாரத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கும் தொழில்நுட்பம் '+1’.இது பற்றிய கூகுளின் தகவல் பக்கம்:http://www.google.com/+1/button/இதைக் கூர்ந்து கவனித்தால், இது ஃபேஸ்புக் தளத்தின் 'Like’ பயன்பாடுபோல இருப்பது தெளிவாகத் தெரியும். ஃபேஸ்புக் பயனீட்டாளர்கள், ஃபேஸ் புக் தளத்துக்குள் செல்லாமலேயே, இணைய தள விவரங்களை 'Like’ என்று சொடுக்குவதன் மூலம் அவர்களது நட்பு வட்டத்துடன் அந்தத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள முடியும். இப்படி எளிதாகத் தகவல் பகிர்ந்துகொள்ள முடிகிற வசதி, ஃபேஸ்புக் தளத்தின் முக்கியத்துவத்தைப் பல மடங்கு உயர்த்தியபடி இருக்கிறது. எந்தத் தகவல், யார் யாரால், எத்தனை பேரால் பகிர்ந்துகொள்ளப்படுகிறது என்பதை ஃபேஸ்புக் அறிந்துகொண்டு, அதற்குத் தகுந்த வகையில் தங்களது விளம்பரத் தொழில்நுட்பத்தை செய்ய முடியும். அதோடு, எந்தத் தகவல்கள் Trending / Breaking News ஆக மாறுகிறது என்பதை எளிதில் தெரிந்துகொள்ள முடியும்.பல பில்லியன் வலைப் பக்கங்களை அலசி எடுத்து, தேடல் பதில் பக்கங்களில் காட்ட முடிகிற கூகுளால்,நிகழ் நேரத்தில் இணைய பயனீட்டாளர்கள் பகிர்ந்துகொள்ளும் தகவல்களைப்பற்றி நேரடியாகத் தெரிந்து கொள்ள இதுவரை முடியவில்லை.டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் தளங்களின் தகவல்களைச் சார்ந்தே கூகுள் இருக்க வேண்டிய நிலை நிறுவனத்தின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்பதைப் புரிந்துகொண்டு '+1’ஐ வெளியிட்டு இருக்கிறது கூகுள்.இன்னும் சில வாரங்களில், பல வலைதளங்களுக்கு நீங்கள் செல்லும்போது, அவற்றின் பக்கங்களில் +1 பட்டன்களைக் காணலாம். இந்த சமூக வெளியீடாவது வெற்றி பெறுமா அல்லது ஆர்குட்,வேவ்,பஸ் போன்றவற்றின் நிலைமை வருமா என்பது விரைவில் தெரிந்துவிடும். இணையத்தின் சிறப்பு இதுதான்.ஏதாவதொரு தொழில்நுட்பம் ஹிட் அடிக்கப் போகிறது என்றால்,அது சில மாதங்களுக்குள் தெரிந்துவிடும்!
கனினி நுட்ப பதிவுகளுக்கு தனி வலைப்பூ உருவாக்கி டாப் டென்னில் இடம் பெறலாமே
ReplyDelete