சமீபத்தில் இந்தியாவுக்கு இரண்டு வார ட்ரிப் அடித்தேன். சான்ஃபிரான்சிஸ்கோவில் இருந்து துபாய் வரை என் பக்கத்து இருக்கையில் அமர்ந்து வந்த அமெரிக்கப் பெண் வேலரி வாஹ்னர், ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு, நேராக இந்தியாவுக்கு வந்துவிட்டார். பெங்களூரில் கடந்த ஐந்து வருடங்களாக வாழும் வேலரி, இப்போது ஒரு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. வேலரியுடன் பேசிக்கொண்டு இருந்தபோது, தேச, மொழி எல்லைகளைக் கடந்து உலகம் சுருங்கிவருவது தெளிவாகப் புலப்பட்டது. சில பல ஆண்டுகளுக்கு முன் (குறிப்பாக, இணையம் பிரமாண்டமாவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்) மேற்கு நோக்கிப் பயணித்த நாளின் நினைவு அப்படியே இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் புவிக் கோளத்தின் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது முக்கியமற்றுப்போய், என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியமானதாக இருக்கும். சில வருடங்களுக்கு முன்னால் டாம் ஃப்ரீட்மேன் எழுதிய 'தி வேர்ல்டு இஸ் ஃப்ளாட்’ புத்தகத்தில் 'எதிர்காலத்தில், உலகில் எந்த இடத்தில் இருந்தாலும், பல துறைகளின் வேலைகளுக்குச் சம்பளம் சமமாகவே இருக்கும். யார் அதிகத் தரத்துடன் வேலை செய்கிறார்களோ, அவர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்’ என்று படித்ததாக நினைவு. இது நடக்க அத்தனை தூரம் இல்லை எனத் தோன்றுகிறது.
இந்தியாவுக்குள் பயணித்தபோது படித்த புத்தகம், ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கைச் சரிதம். ஸ்டீவின் கடைசி நாட்களில் அவரிடம் பேசிய முக்கியமானவர்களில் ஒருவர் கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி லேரி பேஜ். கூகுளின் ஆண்ட் ராயிட் ஆப்பிளுக்குப் போட்டியானதாக இருந்தாலும், வரும் தலைமுறை டெக் உலகத்தினருக்குத் தனது அறிவுரையாக லேரியிடம் பேசியிருக்கிறார் ஸ்டீவ். 'கூகுள் பல ஏரியாக்களில் தலையை நுழைத்து ஏதோதோ செய்துகொண்டு இருக்கிறது. ஆனால், தேடல் தவிர வேறு எதிலும் பிரகாசிக்க முடியவில்லை. காரணம், உங்களிடம் ஃபோகஸ் இல்லை!' என்று சொல்லியிருக்கிறார் ஸ்டீவ். இதன் விளைவோ என்னவோ, இந்த வாரத்தில் கூகுள் தம்மால் இயக்கப்படும் பல பயனீடுகளை மூடிவிடப்போவதாக அறிவித்து இருக்கிறது. அர்ச்சின், பிக்னிக், ஸ்கைமேப் போன்றவற்றை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால், இவை அனைத்தும் விரைவில் ரத்து செய்யப்பட்டுவிடும் என்கிறது கூகுள்.
நான் கணித்த காலத்துக்கு முன்னதாகவே ஃபேஸ்புக் பங்குச் சந்தையில் நுழையத் தயாராகிவிட்டது. அதன் பங்குகளின் அடிப்படையில் பார்த்தால், ஃபேஸ்புக் 100 பில்லியன் டாலர்கள் அளவுக்கு மதிப்பிடப்படும் என்கிறார்கள் பங்குச் சந்தை ஆய்வா ளர்கள். நான் இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டு இருக்கும் ஆப்பிள் மேக்புக் கணினியில் உள்ள கால்குலேட்டரில் 10 பில்லியன் வரைதான் எழுத முடிகிறது. அவ்வளவுக்கு மதிக்கப்படும் வகையில் என்ன இருக்கிறது இந்த ஃபேஸ்புக்கில் என்ற கேள்வி கேட்கப்படுவதை ஆங்காங்கே இருக்கும் சில வலைப்பதிவுகளில் பார்க்கிறேன்!வலுவான சில காரணங்களைச் சுருக்க மாகப் பார்க்கலாம்.
ஃபேஸ்புக்கை அடியோடு வேரறுத்து இன்னொரு சமூக ஊடகத்தளம் வர முடியும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்ற நிலையைக் கொண்டுவந்துவிட்டது ஆன்லைன் உலகம். பல மில்லியன் பயனீட்டாளர்கள் கடந்த சில வருடங்களாகத் தங்களது நண்பர்களுடன் ஆன்லைனில் நட்புகொண்டது மட்டும் அல்லாமல், தங்களது புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை ஃபேஸ்புக்குக்குள் சேமித்துவைத்திருப்பதால், அதைவிட்டு வெளியேறு வது மிகக் கடினம். மற்ற சமூக ஊடகத் தளங்களைப் போல் அல்லாமல், நட்புகளுடன் அளவளாவுவது மட்டும் அல்லா மல், தங்களது தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி மற்றவர்கள் மென்பொருட்களும், விளையாட்டுகளும் (Applications and Games ) தயாரிக்கும் தளமாக மாற்றியது, ஃபேஸ் புக்கின் தொலைநோக்குப் பார்வைக்கு இன்னொரு எடுத்துக்காட்டு. உதாரணத் துக்கு, ஆன்லைன் விளையாட்டு ஏரியாவில் பிரபலமான ஸிங்கா தனது விளையாட்டுக் களை நடத்துவதற்குக் களமாக இன்றும் பயன்படுத்துவது ஃபேஸ்புக்கையே. கடந்த வருடத்தில் ஃபேஸ்புக் 4 பில்லியன் டாலர் களை வருமானமாகப் பெற்றிருக்கிறது. அதில் பெரிய பங்கு, சிறு தொழில்கள் தங்களுடைய விளம்பரங்களுக்காக ஃபேஸ் புக்குக்குக் கொடுத்திருக்கும் தொகை. இவை கொடுக்கக் காரணம், மற்ற எந்தத் தளத்தையும்விட, ஃபேஸ்புக்கால் மிகத் துல்லியமாக இலக்கு விளம்பரங்களைக் (Target Advertising) காட்ட முடிகிறது என்ப தால்தான்.
ஃபேஸ்புக்கைப் பயன்படுத்திப் பணம் சம்பாதிக்க வேண்டுமா?அதற்கும் வழி இருக்கிறது! ஃபேஸ்புக்குக்குள் சென்று 'Log out’ பட்டனை அழுத்தி வெளியேறிவிட்டு, உங்கள் வேலையை ஒழுங்காகப் பாருங்கள்... பணம் வரும்!ஃபேஸ்புக்கில் மக்கள் அதிக நேரம் செலவழித்து, வீணடிப்பதைக் கிண்டலடிக்கும் இந்த ஜோக் பிரபல மாக உலா வருவது வேறு எங்கே? ஃபேஸ்புக்கில்தான்!
நன்றி விகடன்
salary samamavatharkku pala varudangalakum enpathu en kanippu. nalla pathivu
ReplyDeleteGreat
ReplyDelete